ஈதுல் பித்ர் பெருநாள் செய்தி 2021: நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்

13.05.2021

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபராகத்துஹு

ஈதுல் பித்ர் பெருநாள் செய்தி 2021: நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்

ரமழான் மாதம் முடிவடைந்துகொண்டு வருவதால், அல்லாஹ் நமக்கு அளித்த அருட்கொடைகளுக்காக அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வோம். சிறந்த முஸ்லிம்களாக கண்ணியத்துடனும் பொறுமையுடனும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான எமது பலத்தை இந்த மாதம் புதுப்பித்துள்ளது என்று நம்புகிறோம்.

கொவிட் -19 நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், நாம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். எங்களால் செய்ய முடியாதவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நாம் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துவோம்.

ஒரு முஸ்லிமின் வாழ்க்கை மனிதகுலத்திற்கு சேவையாற்றக்கூடுயதாக இருக்க வேண்டும். இதை நாம் பின்வருமாறு நிறைவேற்ற முடியும்:

1. மற்றவர்களை தரிசிக்க செல்வதை விட்டும் தவிர்ந்திருத்தல்.
2. சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல்.
3. உதவிகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு உதவுதல்.

எங்கள் மாநபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைகள் எங்கள் ஈத் கடமைகளை நிறைவேற்றுவதற்கான பல படிப்பினைகளை வழங்குகின்றன. நீங்கள் உடைகள் கொள்வனவு செய்ய முடியாவிட்டாலும், அல்லது புதிய உடைகள் இல்லாவிட்டாலும், உங்களிடம் உள்ளதில் சிறந்த ஆடையை அணியுங்கள்.

பெருநாள் தினத்தை உங்கள் அன்புக்குரியவர்களுடன் வீட்டில் செலவிடுங்கள். மற்றவர்களைப் தரிசிக்க செல்வதை விட்டும் தவிர்ந்திருங்கள். நீங்கள் அவர்களுக்கு நோயை பரப்பலாம் அல்லது உங்களை அறியாமலேயே நோய்த்தொற்று ஏற்படலாம். இந்த நோய் வான்வழியில் பரவக்கூடியது மற்றும் இப்புதிய வகை தொற்றானது மிகவும் ஆபத்தானது. நினைவில் கொள்ளுங்கள், உங்கள் பயணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம், இத்தொற்றுநோயை எளிதில் இல்லாதொழிக்க எங்கள் தேசத்திற்கு உதவுகிறீர்கள்.

ரமழானின் கடைசி நாட்களில் அல்லாஹ் எங்கள் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்காகவும் மற்றும் அமைதியான ஈதுல் பிதர்- நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கும் அருள்பாளிக்குமாறும் பிராரத்தக்கின்றோம்.

ஈத் முபாரக்!

ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர் – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்