புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் கொளரவ அமைச்சருடன் முஸ்லிம் உலமாக்கள் மரியாதை நிமித்தமான சந்திப்பு

ஊடக அறிக்கை

அகில இலங்கை ஜம்இய்யத்துல உலமா, ஷரியா கவுன்சில், சூஃபி தரீக்கா சுப்ரீம் கவுன்சில் மற்றும் தேசிய ஷூரா கவுன்சில் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமயத் தலைவர்கள் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களை மரியாதை நிமித்தம் இன்று அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

கௌரவ புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், சமயத் தலைவர்களை வரவேற்றதுடன், தம்மை மரியாதை நிமித்தம் சந்தித்தமைக்கு நன்றியினையும் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் குறிப்பாக உணவுப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வகையில் முஸ்லிம் சமயத் தலைவர்களும் பள்ளிவாசல்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

இந்த தேவையுடைய காலப் பகுதியில் கிடைக்கும் நிலங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் சமய பாடசாலைகளினால் உணவுப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்வதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்டத்தில் தெஹிவளை ஜும்ஆ மஸ்ஜிதில் இவ்வாறான வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். சாத்தியமான அனைத்து சமய இடங்களிலும் வீட்டுத்தோட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு முஸ்லிம் சமயத் தலைவர்களின் ஆதரவை கௌரவ அமைச்சர் கோரினார். இன்றைய கூட்டத்தில் இலங்கையில் உள்ள முக்கியமான முஸ்லிம் சமய அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி பின்வரும் சமய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

1. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா: அஷ் ஷெய்க் எம் அர்கம் நூரமித் மற்றும் அஷ் ஷெய்க் பி.எல். சல்மான்

2. ஷரியா கவுன்சில்:  அஷ் ஷெய்க் எஸ். அரூஸ்

3. சூஃபி தரீக்கா சுப்ரீம் கவுன்சில்:  அஷ் ஷெய்க் முஃப்தி முஸ்தபா ரஸா மற்றும் மௌலவி அஹமத் ஷா ஜமாலி

4. தேசிய ஷூரா கவுன்சில்: அஷ் ஷெய்க் ஸியாட் இப்ராஹிம் மற்றும் அஷ் ஷெய்க் மஹ்தூம்

கௌரவ அமைச்சர் அவர்களைச் சந்திக்க வாய்ப்பளித்தமைக்கு சமய தலைவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அத்துடன், இஸ்லாம் சமயம் விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதாகவும், இது தொடர்பாக திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும், முஹம்மது நபி அவர்களின் பல வாசகங்கள் காணப்படுவதாகவும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர்.

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் அமைச்சரின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக சமயத் தலைவர்கள் கௌரவ அமைச்சருக்கு உறுதி வழங்கினர். அத்துடன், “நேர்த்தியான விவசாயத்தில் இருந்து சிறந்த நாளைய தினம்” துரித உணவுப் பயிர் உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டம் – 2022 எனும் கருத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துமாறு கோரும் வேண்டுகோள் கடிதங்களை அமைச்சர் சமயத் தலைவர்களிடம் கையளித்தார்.

இச்சந்திப்பின் போது புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. சோமரத்ன விதானபத்திரன, புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (மத அலுவல்கள்) திருமதி. நயன நாதவிதாரண, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார், உதவிப் பணிப்பாளர் திரு. அலா அஹமட் மற்றும் திரு. எம்.எம்.எம். முப்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

ஊடக பிரிவு,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
கொழும்பு – 10.
23.06.2022