“நேர்த்தியான விவசாயத்திலிருந்து சிறந்த நாளைய தினம்” என்ற கருத்திட்டத்தின் கீழ் பள்ளிவாசல்கள் அரபுக் கல்லூரிகள் மற்றும் குர்ஆன் பாடசாலைகளில் வீட்டுத்தோட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

புத்தசாசன மற்றும் சமய விவகார கலாச்சார அமைச்சு மற்றும் தெஹிவளை முஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் “நேர்த்தியான விவசாயத்திலிருந்து சிறந்த நாளைய தினம்” துரித உணவுப் பயிர் உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டம் -2022 எனும் கருத்திட்டத்தின் கீழ் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள் மற்றும் குர்ஆன் பாடசாலைகளில் வீட்டுத்தோட்டத்தினை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வுக்கு புத்தசாசன மற்றும் சமய விவகார கலாச்சார அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.

கௌரவ அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது அனைத்து பள்ளிவாசல்கள் ,அரபுக் கல்லூரிகள் மற்றும் குர்ஆன் பாடசாலைகளின் பொருத்தமான இடங்களில் வீட்டுத்தோட்ட வழிமுறை ஊடாக தோட்ட செய்கையை ஊக்குவிப்பதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இன்று நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் புத்தசாசன மற்றும் சமய விவகார கலாச்சார அமைச்சின் செயலாளர் தோட்ட செய்கையினை ஊக்குவிப்பதில் சமயத்தளங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியன முக்கியமான பங்கு வகிக்கின்றது என்ற கருத்தில் உரையாற்றினார். இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, ஷரியா கவுன்சில் ,தேசிய சூரா சபை ,சூபி தரீக்காக்களின் உயர்பீடம் ஆகியவற்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமயத் தலைவர்கள் ,விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்கள், தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புத்தசாசன மத விவகார கலாச்சார அமைச்சின் கௌரவ அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் ஏனைய விருந்தினர்களினால் உணவுப் பயிர்கள் மற்றும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.

ஊடக பிரிவு
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
25/06/2022